Sunday, November 28, 2010

ரோபோக்களின் நகரம்

பெங்களூர் - கேள்வி பட்ட வரையில் தோட்ட நகரம் (garden city) என்றழைக்கப்பட்ட மென்பொருள் நகரினுள் நுழையும் வரை.அழகழகான வீடுகள், அதை விட அழகான தோட்டங்கள் வீட்டை சுற்றிலும். மிக பிரமாண்டமான வீடுகள், வீட்டின் வெளிப்புற கதவின் வேலைப்பாடே நம்மை வியக்க வைக்கும்.இவை எல்லாத்தையும் விட பெங்களூருவின் தட்ப வெப்ப நிலை சூப்பரோ சூப்பர்.

முதன்முதலில் கல்லூரிக்கு போகும் போது இருந்த ஆர்வம், பெங்களூருக்கு நுழையும் போதும். மெட்ரோ சிட்டி, கலர்புல் கட்டிடங்கள், pubs மற்றும் ஷாப்பிங் மால்ஸ், அதைவிட பெங்களூர் தக்காளி போலே figures :) இப்படி கனவுகளுடன் போனேன்.

போன முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை, அலுவலக வேலை அன்றே ஆரம்பித்து விட்டது. Office boy , Network Administrator , Release Engineer , Developer , Tech Lead இப்படி முதல் நாளே சனி ஆரம்பித்து விட்டது. ஒரு ஆர்வ கோளாறுலே நானும் குடுத்த கூலிக்கு மேலே கூவினேன்.அன்னைக்கே ஆக்கிட்டாங்க அடிமையா.. அதுமுதல் ஒரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் freeya இல்லை. இதுலே மடிக்கணினி (Laptop) வேறே. வீட்டிலிருந்தே வேலை பார்க்கணுமாம். இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்யா, நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு முடிவு பண்ணிட்டாங்க. விதி வலியது யாராலே மாத்த முடியும். நம்ம மூஞ்சிய பார்த்தாவே கண்டு பிடிச்சுடுவான்களோ?

இதெல்லாம் விட முக்கியமானது நாங்க தங்கி இருந்த guest house. ரொம்ப hi-fi யா, நீச்சல் குளத்துடன் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு. ஒரு 300, 400 அடுக்கு மாடி வீடுகள் இருக்கும். நான் இருந்த ஆறு மாதங்களில் எனக்கு தெரிஞ்சு பக்கத்துக்கு வீட்டில் கூட யாரையும் பார்த்தது இல்ல. எல்லாம் இயந்திர மயமாய் இருந்தது. அட சூரிய அஸ்தமனத்தையே ஒரே முறை தான் பார்த்திருந்தேன். அதயே அதிசயமா புகைப்படம் எடுத்து வைத்தேனா பார்த்துக்கோங்களே. எல்லாரும் மனிதர்களா இல்லை இயந்திரமா(Robot)னே சந்தேகம் வந்துட்டது.

ஒரு வாரம் முழுவதும் அலுவலக வேலை, நேரம் காலம் தெரியாமல் நடுநிசி வரை. வாரக்கடைசியில் பார்க், சினிமா, உணவு விடுதியில் டின்னர். இதுதான் வாழ்கையா? ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை. ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகள் விளையாட்டு கூட fixed timeline தான். குழந்தைகள் பேச ஆரம்பித்த உடனே நர்சரி ஸ்கூலில் விட்டு விட்டு, வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதுவும் இன்று பெருகி வரும் தனிக்குடித்தன வாழ்க்கையில் சராசரியாக வேலைக்கு செல்லும் கணவன், மனைவி ஒன்றாக செலவிடும் நேரம் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. அதிலும் பெங்களுர்வாசிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். 24 மணி நேரமும் தூங்கா நகரம். எந்த நேரமும் போக்குவரத்து வசதிகள் நிரம்பிய சாலைகள். Anytime we can get Cab service. அவர்களும் கேப்ல கெடா வேட்டரவங்க தான். பணம் பண்ணும் வித்தை பெங்களூர் வாசிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணுகிறார்கள். நானும் அந்த ரோபோக்களில் ஒருவனாக மாறிப்போனேன். அவர்களிடம் இருந்து கொஞ்சம் அந்த வித்தையையும் கற்றுக்கொண்டேன்.

நானும் அந்த ரோபோ கூட்டத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரோபோவாக மாறிக்கொண்டிருந்தேன். எல்லா எந்திரத்திற்கும் ஆயுத பூஜை அன்று விடுமுறை உண்டு. ஆனால் இந்த மனித ரோபோவுக்கு அன்று தான் overtime. ஒரு நாள் என் மனித மூளை சிந்திக்க தொடங்கியது. எப்படியாவது அந்த ரோபோக்களின் நகரில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று, அந்த நாளும் வந்தது. அப்பாடா தப்பித்தாகி விட்டது என்று நினைத்த போது இன்னொரு மாறிக்கொண்டிருக்கும் நகரில் வந்து சேர்ந்தேன். ஏற்கனவே ரோபோவான எனக்கு இது புதிதாக தோன்ற வில்லை. ஆனால்

"எந்திரனையும் மனிதனாக்கியது காதல்
ஆனால் இந்த ரோபோ கன்னியையும் கணினி ஆக்கியது"

-மனிதனாக மாற முயற்சிக்கும் ஒரு எந்திரன்.

Tuesday, July 27, 2010

கல்யாணம்

கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..



டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..



சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...



கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.



கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....



25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....



முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....


பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)



அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)



மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...



ஆறு மாசம் ஓடிடும்...

அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...



பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...


வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..


நீங்க என்ன நெனைக்கறீங்க...

இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்

Wednesday, July 7, 2010

மீசை



மீசைன்னு சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது பாரதியார் தான். எல்லாருக்கும் சின்ன வயசுல முதல் ஹீரோ அப்பாதான். எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனா எங்க அப்பாவுக்கு அவ்ளோ பெரிய மீசையெல்லாம் இல்ல. இருந்தாலும் அவர் ஆல் டைம் ஹீரோ தான், என்னையும் இவ்ளோ பெரிய ஆளா ஆக்கிருக்காரே :).

நான் பள்ளிக்கு போய் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" னு படித்த போது, முண்டாசு கவிஞர் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அது மட்டுமில்லை அவருடைய மீசையும் எனக்கு பிடித்திருந்தது ஒரு காரணம். சாதாரணமா மீசை கீழ் நோக்கி தான் போகும். ஆனா பாரதிக்கு வில்லைப்போல வளைந்து மேல் நோக்கி இருக்கும். அதுவே ஒரு அழகு தான்.

நான் பெரியவனா ஆகி மீசை வச்சா பாரதி மாதிரி தான் வெக்கணும்னு முடிவே பண்ணி இல்லாத மீசையை தடவி பார்த்துக்குவேன். அப்புறம் ஒரு பத்தாவது படிக்கும் போது பகத்சிங் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அவர் மீசையும் அப்படியே வில்லைப்போல் மேல் நோக்கி இருக்கும். ஆனா பாரதி கூட கம்பேர் பண்ணும்போது சின்ன மீசை தான். எனக்கு தெரிஞ்சு ரியலா யாருக்குமே மீசை மேல் நோக்கி இருந்ததில்லை.

நான் சின்ன வயசுலே இருந்து மரியாதையை குடுக்கற ஒருத்தர் எங்க மாமா. அம்மாவோட பெரிய தம்பி. எங்க சொந்தத்திலேயே white காலர் ஜாப் முதல் முதலில் போனது அவர்தான். எனக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்தி அதில் ஈடுபாடு கொண்டு வந்தவரும் அவர்தான். என் கை பிடித்து சுட்டுவானை (mouse) பழக்கி விட்டதும் அவர்தான் (ரோல் மாடல்). அவரும் மீசை பெருசா வச்சிருப்பார். அதனாலோ என்னமோ அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ contact இல்ல. :( ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

என் கெட்ட நேரம் நான் +2 படிக்கும் வரைக்கும் எனக்கு மீசை வரவே இல்லை. எங்க அண்ணனுக்கு எல்லாம் பத்தாவதிலேயே வந்திருச்சு. அப்போதிருந்து கொஞ்சம் பெரிய மீசை வச்சிருக்கரவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ஆள் இருப்பானுங்க அரை கிலோ ஆனா மீசையும் தாடியும் ஒரு கிலோ இருக்கும். அப்ப எல்லாம் கடவுளே இது உனக்கே நியாயமானு கேப்பேன்.

அட கொஞ்ச நாள் போச்சுனா வந்திரும், பாரதி மாதிரி பெருசா வளத்திரலாம்னு கனவு கண்டிருந்தேன். என் பொறுமைக்கும் ஒரு அளவிருந்தது. காலேஜ் முடிக்கற வரைக்கும் கூட வரலை. இந்த கடுப்புக்கு நடுவுல எல்லாரும் என் தங்கச்சியை எனக்கு அக்கானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

உடம்புனா வெயிட் ஏத்தலாம் குறைக்கலாம். இந்த மீசை வளர என்ன பண்ணுறது!!!.
விதியேனு விட்டுட்டேன். ஒரு வழியா PG படிக்கும் போது அண்ணாச்சி(மீசை) கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தது. அடிக்கடி தடவி பார்த்துக்குவேன் பாரதி மாதிரி வரணும்னு.

அட!!! மீசை தான் இப்படினா தாடி அதுக்கு மேல. இருந்ததே நாலு முடி. அதுலயும் ரெண்டு முடியை என் தங்கச்சி இழுத்து விட்டுட்டா. ரொம்ப வருஷம் கழித்து ஆட்டு தாடி மாதிரி ஒண்ணு வந்திருக்கு.

நான் லவ் பண்ண கூடாதுன்னு ஒரு ஐடியால இருக்கேன். ஏன்னு காரணம் தெரியணுமா? ஒருவேளை லவ் பண்ணி தோத்துபோனா தாடி வளர்க்கணும். நமக்குதான் வளராதே!!! (பொல்லாதவன் தனுஷ் பாணில சொல்லனும்னா பிகர் மடங்காததுக்கு இப்படி ஒரு மொக்கை reasona னு நீங்க நெனைக்கறது தெரியறது)

உலகையே பயமுறுத்திய ஹிட்லரின் அடையாளமும் மீசை தான். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் அடையாளமும் மீசை தான்.

தமிழ் நாட்டை பொருத்தவரைக்கும் மீசை வீரத்துக்கு அடையாளம். ஆனா உண்மையிலே வீரத்துக்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லன்னு சுஜாதா (famous writter) எழுதின அறிவியல் கட்டுரையில் படிச்சிருக்கேன். அந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க பெருசா மீசை வெச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ இருக்கற பொண்ணுங்க மீசைய trim பண்ணுனா தான் சைட் அடிக்கறாங்க.

என்னமோ மீசை தாடி வளர்றது ஹோர்மோன் செய்யிற வேலை. இப்போவும் விருமாண்டி கமல் மீசை, அஜித் தாடி பார்த்தா பொறாமையா தான் இருக்கும். ஹ்ம்ம் என்ன பண்ணுறது...

ஆம்லேட்

ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி


என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!

இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆmலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!

**********************

என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!

சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!

அவ்வளோதானா?

முடியலைங்க!


இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!


**************************

என்னம்மா சாப்பிடலாமா?

இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.

இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!


********************************
என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!

ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா?


இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!


*******************************

என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?


முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!


இது ஒரு மூன்று வருடம் ஆனது!

***********************************

என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!

ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!


******************************

என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!

இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!


*******************************

என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!

அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!


இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!

********************************

இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:

Saturday, June 12, 2010

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…

என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும்… திடும்… திடும்…

கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க“செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம்“இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.

அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும்,ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு,சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gateஎல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, வேறே ஏதும் இருக்கா?

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறதுன்னு, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

Thursday, June 3, 2010

மழைச்சாரல்

மழைதூறளில் மோட்டார் வண்டியில் செல்வதே ஒரு சுகமான அனுபவம். அதுவும் சென்னையில் வெய்யில் காலத்தில் மழை பெய்வது ஆனந்தத்திலும் ஆனந்தம். சாதாரணமா சந்தோசமா இருந்தா வண்டியை வேகமாக ஓட்டுவேன். குஷியாக இருந்தா இரண்டு கைகளையும் விட்டு சிறிது தூரம் ஓட்டுவேன். அன்றும் அப்படித்தான் ரொம்ப குஷியாக இருந்ததால் கைகளை விட்டு ஓட்டினேன். அந்த சந்தோசம் நிலைக்கவில்லை. அடுத்த நாளே அடைமழை பெய்தது. லைலா வந்தாலும் சாலையெல்லாம் வெள்ளம் (ஜொள்ளு), லைலா புயல் வந்தாலும் சாலையெல்லாம் வெள்ளம் :).

மோட்டார் வண்டியில் நெடுந்தூர பயணம் என்றாலே ஒரு மகிழ்ச்சியான பயணம் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை சென்னைலிருந்து பெங்களூர் வரை இரு சக்கர வண்டியில் அதுவும் லேசான மழை தூரலில் சென்றேன். 360 KM தனிமையான பயணம் அது, ஜெயம் ரவி பாவனாவை தேடி சென்றது போல அல்ல அது. வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தேன். ஆளில்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத நான்கு வழி பாதையில் நான் மட்டும்.பொதுவாக நெடுந்தூர பயணம் என்றால் வழி நெடுக வண்டியை நிறுத்தி ஏதாவது சாப்பிட தோணும் ஆனால் ஏனோ அன்று வண்டியை நிறுத்த தோணவில்லை.
அன்று ஒரு நாள் மட்டும் எல்லாமே அழகாக தெரிந்தது பெங்களூர் உள்பட. அடுத்து வந்த பெங்களூர் நாட்கள் அவ்வளவு இனிமையாக இல்லை.

Tuesday, May 18, 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Sunday, May 9, 2010

என் முதல் விமான பயணம்

முதன்முதலில் எதை செய்தாலும் அது ஒரு புதிய அனுபவம்தான்.
நான் முதல் முதலில் விமானத்தில் செல்ல போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனம் ஆகாயத்தில் பறந்தது. சின்ன வயதில் இருந்து அண்ணார்ந்து பார்த்ததில் அமர்ந்து செல்ல போகிறோம் எனும் போது மனம் பறக்காதா என்ன? அதுவும் ஓசியில் ஏசி பயணம். அதிகாலை சீக்கிரம் எழுந்து ரெடி ஆகி எனது passion பிளஸ் இல் விமான நிலைய வாயிலுக்கு சென்று பார்க் செய்து மணி பார்த்தால், விமானம் புறப்பட ஒண்ணரை மணி நேரம் இருந்தது. சரி டொமெஸ்டிக் விமானம் தானே பத்து நிமிடத்தில் சென்று விடலாம் என்று மெதுவாக சென்றேன். முதலில் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். வாங்கிவிட்டு உள்ளே சென்றால், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தேவலாம் போலிருந்தது. அதை விட மூன்று மடங்கு பெரிய வரிசை. ஆனா வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது ஆறுதல் அளித்தது.

அரை மணி நேரம் ஊர்ந்த வரிசையில் இப்பொழுது தான் செக்யூரிட்டி செக்கிங்கை அடைந்தேன். என் கைப்பையை scanner உள்ளே அனுப்பி விட்டு ஒருவர் மெட்டல் detector இல் செக் பண்ண ஆரம்பித்தார். என் பாக்கெட்டில் இருந்த purse , சாவிக்கொத்து மற்றும் கைக்குட்டை முதலானவற்றை கூட வெளியில் எடுத்து செக் பண்ணினார். இதற்கே இருபது நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கு இருந்த எல்லா கவுன்டரிலும் பெண்கள் தான். அட!! பெண் போலீஸ் கூட விமான பணிப்பெண் போல மேக்கப் போட்டிருந்தாங்கனா பாத்துக்கங்க. சரி கடைசியாக விமானத்தில் ஏற போகிறோம் என்று நினைத்தால் மறுபடியும் ஒரு வரிசை. ச்சே!! இதுக்கு நான் ட்ரெயின் ல போயிருக்கலாம்னு தோணிருச்சு. ஆனா அங்க ஒண்ணும் இல்ல, போர்டிங் பாஸ் செக்கிங் மட்டும் தான். செக்கிங் முடிஞ்சு ஒரு பேருந்தில் எல்லாரையும் ஏற்றி கொண்டு விமானம் நிற்கும் இடத்திற்கு கூட்டி சென்றார்கள்.

நான் கற்பனையில் நினைத்ததை விட மிகவும் சிறிய விமானம். உள்ளே போகும் போதே விமான பணிப்பெண்கள் காலை வணக்கம் சொன்னார்கள். அந்த நிமிடம் முதல் விமானம் தரை இறங்கும் வரை அவர்களின் புன்சிரிப்பு ஒரு மில்லி மீட்டர் கூடவோ குறையவோ இல்ல. நல்ல பயிற்சி!!. மைதா மாவு நிறம், மித மிஞ்சிய மேக்கப், ரெடிமேட் புன்சிரிப்பு. ஆனா அழகா இருந்தாங்க. பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தெரியும்னு சும்மாவா சொன்னாங்க? ம்ம். விமானத்தின் உள்ளே பார்ப்பதற்கு KPN பேருந்து போலவே இருந்தது. கொஞ்சம் கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. ஐந்து நிமிடத்தில் விமானம் கிளம்ப ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்த ஜன்னல் ஓர இருக்கையில் ஒருவர் அமர்ந்து விட ஏமாற்றத்துடன் பக்கத்தில் அமர்ந்தேன். சீட் பெல்ட்டை அணிய த்ரிஷா மாதிரியெல்லாம் கஷ்டப்படலை, அவங்களே டெமோ காமிக்கிறாங்க. :)

ஓடுகளத்தில் மெதுவாக ஓடிய விமானம் திடீரென வேகம் பிடித்தது. மெதுவாக மேலே செல்ல செல்ல காதினுள் கொய்ய்ய் என்று ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டது. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுனு சொல்லுவாங்க ஆனா இந்த இயந்திர பறவை உயரே போக போக ஊர் கட்டிடங்களெல்லாம் குருவி மாதிரி தெரிய ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப்புறம் வெறும் மேகம் மட்டும் தான் தெரிந்தது. எனக்கு அருகில் இருந்தவர் விமானத்தில் ஏறியதில் இருந்து தூங்கி கொண்டிருந்தான், சோம்பேறி. சிறிது நேரத்திற்கு அப்புறம் ஏதோ வரட்டி மாதிரி ஒன்றை சாப்பிட தந்தார்கள். ஆனா வரட்டியை விட பெரிய சைஸ். அதை சாப்பிட்டு முடிக்கும் முன்னரே பெங்களூர் வந்து விட்டது. ;)

எந்த ஊர் பிடிக்காது என்று நினைத்தேனோ அது இன்று மிகவும் அழகாத் தோன்றியது. பச்சை பசேலென புல்வெளி, கண்ணாடி மாளிகை போன்ற விமான நிலையம், ஆங்காங்கே சிறிய வகை விமானங்கள். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், திரைப்படங்களில் காண்பது போல் என்னுடைய பெயர்ப் பலகையை வைத்துக்கொண்டு டாக்ஸி டிரைவர் நின்று கொண்டிருந்தார். சீனு உனக்கெல்லாம் ஒரு நேரம்டா என்று என் தோளை மனதிலேயே தட்டிக் கொண்டே அவர் அருகில் சென்று கையை ஆட்டினேன். அவர் புரிந்து கொண்டு என்னை கூட்டி சென்றார். காரும் ஏசி முடியலே!!.

விமான நிலையத்தில் இருந்து நான் செல்ல வேண்டிய இடம் 50 கிலோமீட்டர், கிட்ட தட்ட ஒண்ணரை மணி நேர பயணம். ஆனா நான் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றது ஒரு மணி நேரம் கூட இருக்காது. ம்ம் என்ன செய்ய பெங்களூர் டிராபிக் அப்படி. திரும்பி வரும்போது இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டேன். ஆனால் விமான நிலையத்தில் அந்த அளவு கூட்டம் இல்லை. பதினைந்து நிமிடத்தில் கேட்டுக்கு வந்துட்டேன். ட்ரெயின் மாதிரியே விமானமும் லேட். அந்த நேரத்தில் அங்கிருந்த 12 கேட்டையும் சுத்தி பாத்துட்டேன். சிறிது நேரத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்தேன். லேசர் லைட் மாதிரி ஓடுகளத்தில் உள்ள விளக்குகள் பின்னோக்கி செல்ல அதுவே ஒரு அழகு தான். விமான பணிப்பெண்ணின் இருக்கை அருகிலேயே என் இருக்கை. நான் அவரிடம் பேசிக்கொண்டே வர, அதே புன்சிரிப்பு மாறாத பேச்சு. விமானம் சென்னையை நெருங்கும் போது தரை முழுவதும் நட்சத்திரம் கொட்டியது போல, மின்மினி பூச்சி கூட்டங்கள் போல அவ்வளவு அழகாக விளக்குகள்.

என்ன இருந்தாலும் பகல் நேர விமான பயணம் போல ஒரு இனிமையான பயணம் வராது.